மானிட வாழ்வில் இறைவனின் பங்கு

omtamil

மானிட வாழ்வில் இறைவன் என்று கூறும் பொழுதினிலே நம் முன்னோர்களை ஒரு கணமாவது நினைவுகூராமல், அதுவும் மிக நன்றியுணர்வுடன் நினைவுகூராமல், இருப்பதற்கு நம் தமிழ்த் தாய் அனுமதிக்கவில்லை.

எதற்காக நம் தமிழ்த் தாய் அனுமதிக்கவில்லை என்றும் கூறுகின்றேன் கேளுங்கள் மக்களே !

நம் தமிழ்த்தாய் அன்று தொட்டு இன்று வரை தன் வாழ்நாட்களில் எண்ணுக்கு அடங்காத பெரியோர்களையும், மகான்களையும், கவிஞர்களையும், ஞானிகளையும் தன் கருணையால் தாலாட்டியுள்ளாள். தமிழ் என்று நினைக்கும்பொழுது இத்தகைய பெருமக்களுள் நம் வள்ளுவர் மிகவும் குறிப்பிடத்தக்கவர்.

நம் வள்ளுவனார் வாழ்ந்த காலம் தோராயமாக 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இன்னமும் குறிப்பாக கூறவேண்டுமேயானால் நாம் இன்றிலிருந்து 2047 ஆண்டுகளுக்கு பின்னோக்கிச் செல்ல வேண்டும். அதாவது கி.மு 31 வருடங்கள்.

அன்று வள்ளுவப் பெருந்தகையால் பொதுமக்களுக்காக கூறப்பட்ட அறம், பொருள், இன்பம் வீடு என்கின்ற வாழ்க்கைக் கல்வியை தன் குறள்நடையில் இருவரிகளில் அடக்கிவிடுகின்றார். அன்று கூறியவை இன்றும் நம் வாழ்வில் பொருந்துகின்றன. ஆகையினால், அத்தகைய அளப்பெரிய விடயங்களை கூறியோர் கையாண்ட மொழியாய் நம் தமிழ்த்தாய் உள்ளதால் நம் வாழ்வில் இறைவனை பற்றி பல பெரியோர்கள் அறிய தந்துள்ளபோதிலும், நம் செம்மொழியான தமிழிலே, மகாவித்தகனும், ஞானியுமான வள்ளுவர் இங்ஙனம் கூறுகின்றார்.

             «அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
               பகவன் முதற்றே உலகு».

நம் தமிழ் மொழியானது எவ்வாறு அகரத்தை முதலாக கொண்டு ஆக்கப்பட்டுள்ளதோ, அதேபோல் இவ்வுலகமானது இறைவனை முதன்மையாக கொண்டு படைக்கப்பட்டுள்ளது.

இதன் பொருள் பலருக்கும் தெரிந்ததே!

மீண்டும் வள்ளுவப் பெருந்தகை தம் குறளில்:

              ” கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
                நற்றாள் தொழார் எனின்

என்னும் தகவலை மக்களுக்காக உரைக்கின்றார்.

இதன் பொருள்தான் என்ன?

தூய அறிவே வடிவாக விளங்கும் இறைவனை நாம் வணங்காமல் இருப்போமானால், நாம் கற்ற கல்வியினால் பயன் என்ன இருக்கிறது?

ஆமாம், ஒரு உண்மையை உணர்ந்த மகான் துல்லியமாக, நறுக்கென்று கூறும் விடை, «யாதொரு பயன் ஓன்றுமில்லை».

மானிடராக பிறந்த நாம் எத்தகைய பயனை அடைய விரும்புகின்றோம் என்பது இங்கு தொக்கி நிற்கும் ஒரு விடயமாகும். ஏனென்றால், மனிதனுக்கு மனிதன் அவன் தன்மை மாறுபடுவதால் எல்லோருடைய விருப்பங்களும் ஒரே விதத்தில் அமைவதில்லை.

இருப்பினும் மனிதனானவன் அறிவை சாராவிட்டால், குறைந்தபட்சமாக வாழ்க்கைக் கல்வியை கூட கற்க முடியாத நிலையை அடைகின்றான்.

நான் இங்கு எம் மக்களுக்கு கூற விரும்புவது என்னவென்றால், அறிவே வடிவான இறைவனை நாம் அணுகவில்லையென்றால், அவன் வழிநடத்துதல் இல்லையென்றால் நம் வாழ்வில் எல்லோரும் விரும்பும் பேரானந்த நிலையை அடையமுடியாது. ஏன் அடிப்படையான ஒரு ஆனந்த வாழ்க்கையை கூட வாழமுடியாமல் அமைந்துவிடும்.
ஆகையினால், சகோதர, சகோதிரிகளே, மற்றும் மதிப்பிற்குரிய பெருமக்களே தெளிந்த மனிதர்கள் தம் வாழ்வில் ஆனந்தப் பெரும்பேறு அடைய விரும்புவார்கள். இந்நிலையானது அறிவே வடிவான இறைவனை நாம் நித்தமும் வணங்குவதால் மட்டுமே நிலைபெறுகின்றது.

ஏனென்றால் இறைவனானவன்,

             «யாவிற்கும் மூலமாய் யாவையுமாய் நீக்கமற,

               எங்கும் நிறைந்திருக்கும் மானிடரின் வாழ்க்கையிலே

               உண்மையை உணர்ந்தாலும் உணராவிட்டாலும்,

               இறைவனை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்,

               எல்லாம் இறை செயலே! (x 2)»

                                                                             - ஆக்கம் சிவசித்தன் (நா.கண்ணன்)

பாடியவர்: மதிப்புக்குரிய ஆசிரியை வாசுகி ஜெயபாலன்

அனைத்துக்கும் முதலானவனை, முதற்பங்காளியுமான பெருந்தகையோனை, நித்திய ஆனந்தம் வழங்குபவனை நித்தமும் போற்றுவோம்.

மற்றும், இவ்வுரையை எம்மக்களுடன் பகிர்ந்துகொள்ள வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி கூறி விடை பெறுகின்றேன்.

ஓம் தமிழ் ஓம்

ஓம் சிவ ஓம்

வாழ்க வளமுடன்